search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் வன்முறை"

    சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதால் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. #Sabarimala
    கண்ணூர்:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    இதில் அரசியல் தலைவர்களின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தலைவர்களின் வீடுகள் மாறி மாறி தாக்கப்படுவதால் பதற்றம் நீடித்து வருகிறது.

    தலசேரி மண்டல பா.ஜனதா இளைஞரணி தலைவர் ரிதிலின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களால் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அவரது வீட்டிலுள்ள சில பொருட்கள் சேதமடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைப்போல தலசேரில் பா.ஜனதா கொடிக்கம்பம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அங்கு நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களின் ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதாவினர் கல்வீச்சு நடத்தினர். இதில் 2 பெண்கள் காயமடைந்தனர். இதைப்போல பா.ஜனதா தலைவர் ஒருவரின் வாகனமும் சேதமடைந்தது.

    முன்னதாக மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த கலெக்டர் மிர் முகமது அலி, அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த இன்று வரை எந்தவித போராட்டங்களும் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

    ஆனாலும் மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் தலசேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு வரை போலீசார் ‘144’ தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

    இதைப்போல மாநிலத்தின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகாவும், அதனால் அந்த பகுதிகளில் பதற்றம் நிலவுவதாகவும் கேரளாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, கேரளாவில் நாத்திகத்தை பரப்ப இடதுசாரி அரசு திட்டமிட்டு செயல்படுவதாக நாயர் சேவை சமூகம் (என்.எஸ்.எஸ்.) குற்றம் சாட்டி உள்ளது. எந்த மதத்தின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படுவதே மனித குலத்துக்கு அவசியமானது எனக் கூறியுள்ள அந்த அமைப்பின் செயலாளர் சுகுமாரன், இந்த நம்பிக்கையை யாரும் சீர் குலைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். #Sabarimala
    கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்வதை கண்டித்து பாஜகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டி போட்டு போராட்டம் நடத்துவதால் வன்முறை தொடர்கிறது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்தை மீறி அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியானதும் இளம்பெண்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை பக்தர்கள் வழி மறித்து திருப்பி அனுப்பினர்.

    பக்தர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்களை போலீசார் சபரிமலை சன்னிதானம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் சாமி தரிசனமும் செய்தனர்.

    50 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இருவர் சபரிமலையில் தரிசனம் செய்த தகவல் வெளியானதும், கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தது. மேலும் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், சபரிமலை கர்மசமிதியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

    இதையொட்டி நடந்த முழு அடைப்பில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. கடைகள், அலுவலகங்கள், அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. கொடிக் கம்பங்களும் உடைக்கப்பட்டன.

    கேரளத்தின் தென்பகுதியான நெய்யாற்றின்கரை முதல் வடபகுதியான கண்ணூர் வரை கலவரம் பரவியது. சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் பல இடங்களிலும் கலவரம் மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

    வன்முறையில் ஈடுபட்டதாக நேற்றிரவு வரை 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருவனந்தபுரம், மலையின்கீழ், கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, ஆலப்புழா நகரங்களில் பதட்டம் நிலவியது.

    இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு அணியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்னொரு அணியாகவும் பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வீடுகள் மாறி மாறி தாக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு கண்ணூர் மாவட்டம் தலச்சேரி தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ‌ஷம்சீர் வீடு மீது ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகளே காரணம் என்று ‌ஷம்சீர் எம்.எல்.ஏ தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினார்.

    ‌ஷம்சீர் எம்.எல்.ஏ. வீடு மீது இரவு 10.30 மணிக்கு குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தலச்சேரியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி. முரளீதரனின் மூதாதையர் வீடு முன்பு வெடிகுண்டு வீசப்பட்டது.

    ‌ஷம்சீர் எம்.எல்.ஏ. வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர் என்று பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. அங்கு மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மலையின்கீழ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள்.

    இதற்கிடையே மலையின் கீழ் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏராளமான வெடி குண்டுகள், பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதிரடிப்படை போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது பள்ளியின் மைதானத்தில் ஒரு சாக்கு மூட்டையில் 4 வெடிகுண்டுகள் இருந்தது. இதுபோல கூரிய கற்கள், ஜல்லி கற்கள் மற்றும் ஆயுதங்களும் சாக்கு மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.

    பள்ளிக்குள் வெடி குண்டை வைத்துச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் தொடரும் வன்முறை சம்பவங்களால் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. #sabarimala
    ×